பொதுவாகவே எல்லா மனிதர்களும் ஹிப்னாடிசம் என்கிற அறிதுயில் குறித்து ஏதாவது செய்திகளை நண்பர்களிடம் இருந்தோ, புத்தகங்கள் படித்தோ, திரைக் காட்சிகளில் , தொலைக் காட்சிகளில் பார்த்தோ தெரிந்து கொண்டிருப்பார்கள்.
உலகளாவிய அளவில் அவை பெரும்பாலும் தவறாகவே இருக்கின்றன.
அவை அறிதுயில் குறித்த தனி மனிதனின் தனிப்பட்ட அச்சங்களாக இருக்கலாம். ஹிப்னாடிஸ்ட் என்கிற 'ஆற்றல் மிகுந்தவர் 'குறித்த அச்சங்களாக இருக்கலாம். அறிதுயில் என்கிற கலை குறித்த அச்சங்களாக இருக்கலாம்.
தம்முடைய கட்டுப் பாட்டை இழந்து விடுவோம் என்று அஞ்சலாம். மீண்டு வர மாட்டோம் என்று நினைக்கலாம். வசிய நிலையில் தவறுகள் செய்து விடுவோமோ என்று அஞ்சலாம். அறிதுயில் என்பது ஒரு அச்சுறுத்துகிற பயங்கரமான மாய வலை என்று கூட நினைக்கலாம்.
இவ்வாறாகப் பல்வகை அச்சங்கள் பலர் மனத்திலும் நிலவுவதால், பொது மக்களால் அறிதுயிலின் அருமையான பயன்களை முழுமையாக அறிய முடியாமல், அடைய முடியாமல் போகிறது.
எனவே அவ்வாறான தவறான எண்ணங்களைக் களைந்து, அறிவியல் அடிப்படையிலான உண்மையான விவரங்களைத் தந்து, அறிதுயிலின் பயன்பாட்டைத் தமிழறிந்த எல்லோருக்கும் கொண்டு சென்று, மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழி காட்டுவது தான் இந்தப் பயிற்சி வகுப்பின் மேலோங்கிய நோக்கம்.
அறிதுயில் என்பது ஒரு மனிதனின் எண்ணங்களையும் இயல்களையும் முறையான வழியில் செலுத்துவதற்கு உதவக்கூடிய ஒரு வழிமுறை. இயல்பான விழிப்பு உணர்வு நிலையில் நம்மால் செய்ய இயலாது என் நாம் நினைக்கிற செயல்களை, நம் மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் செய்ய உதவுகிற ஒரு வழிமுறை என்றும் சொல்லலாம்.
இவ்வாறாக, அறிதுயில் குறித்த அச்சங்கள் அகல்கிற போது, அறிதுயிலின் பயன்கள் பற்றிய நல்ல விவரங்கள் தெரிய வருகிற போது, மக்கள் பலரும் இக்கலையை விரும்பிக் கற்றுக் கொண்டு தங்கள் வாழ்வில் பயன்படுத்திக் குடும்பத்திலும், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களிலும் , சமூக வெளிகளிலும் மகிழ்ச்சியோடு விளங்குவார்கள்.
பொது மக்கள் மட்டுமல்லாது, மன நலம், மன வளம், உடல் நலம், மருத்துவம் போன்ற ஆற்றுப் படுத்தும் துறைகளில் பணியாற்றும் வல்லுனர்களும், நிபுணர்களும் கூட அறிதுயில் குறித்த உண்மையான விவரங்களை இந்தப் பயிற்சியின் மூலமாகத் தெரிந்து கொண்டு தங்களுக்கு மட்டுமல்லாமல், தங்களை நாடி வருபவர்களுக்கும் கொடுத்துப் பலருக்கும் பயனுள்ளவராக விளங்கலாம்.